Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?


யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலுக்கு பின்னர் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் குறித்த தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியை மூடி மறைப்பதற்காக குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். திருநங்கை சார்ந்த தரப்புக்களால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தபோது ஊடகவியலாளர் பிரதீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளில் அவரை அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்புக்களால் அறிவிக்கப்பட்டதாக சொல்லி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பில் சர்வதேச தூதரகங்கள், சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கு அவரால் முறைப்பாடு அனுப்பப்பட்டது.

2009இல் புனர்வாழ்வுக்கு பின்னர் பிரதீபன் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து 15 ஆண்டுகளாகின்றது. தென்னிலங்கையில் வருகைதருபவர்களின் எத்தனையோ நிகழ்வுகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

ஆனால் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுமதிக்காதமை வேண்டுமென்றே தம்மை அவமானப்படுத்த மேற்கொள்ளப்பட்டதாகவும், தனது தொழிலை சுதந்திரமாக செய்முடியாது நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் ஒரு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.

அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பிரதீபனிடம் உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றது. 

இவ்வாறானநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும்முகமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியாமல் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதற்கு முழுப் பொறுப்பையும் அரச புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவேண்டும். முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழலையே இது காட்டுகின்றது. - என்றார்.

No comments