Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாட்டில் இல்லாதவர்களுக்கு விவாகரத்து பெற்றுக்கொடுத்த வழக்கு - யாழில் சட்டத்தரணி கைது


வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

உடுவில் பகுதியை சேர்த்த குறித்த சட்டத்தரணியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு கைது செய்த நிலையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை சட்டத்தரணியை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த மூன்று கணிணிகளையும் பகுப்பாய்வு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். 

அந்நிலையில் கணவன், சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து , விவாகரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். 

அதனை அடுத்து சகோதரி , யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணியை நாடி , வெளிநாட்டில் உள்ள தம்பதியினருக்கு யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்று தருமாறு கோரியுள்ளார். 

அதனை அடுத்து சட்டத்தரணி , தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் இருவரை கணவனுக்கு ஒருவரையும் , மனைவிக்கு ஒருவரையும் நியமித்து சாவகச்சேரி நீதிமன்றில் விவகாரத்திற்கு விண்ணப்பித்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து , நாட்டில் இல்லாத இருவருக்கும் விவாகரத்து பெற்றுக்கொடுத்துள்ளார். 

விவாகரத்து பெற்று சில காலத்தின் பின்னர் , இத்தாலியில் வசித்து வந்த பெண் , யாழ்ப்பாணம் வருகை தந்து, பிறிதொரு சட்டத்தரணி ஊடாக தனக்கு விவாகரத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , அப்பெண்ணிற்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

நாட்டில் இல்லாத தனக்கு , தன்னுடைய சம்மதம் எதுவும் பெறப்படாத நிலையில் எவ்வாறு விவாகரத்து வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அந்நிலையில் விவாகரத்து நடவடிக்கையை முன்னெடுத்த சட்டத்தரணியின் அலுவலகத்தை சோதனையிட கடந்த மாத இறுதியில் நீதிமன்ற அனுமதி பெற்ற பொலிஸார் அலுவலகத்தினை சோதனையிட்டதுடன் ,கணனி உள்ளிட்டவையுடன் அலுவலகத்தில் உள்ள கோப்புக்களையும் சோதனையிட்டனர். 

இந்நிலையில் சட்டத்தரணியை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போதே சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 


No comments