Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மூன்று நாட்களாக உணவின்றி கப்பலில் யாழை வந்தடைந்தேன்


ஜூலை கலவரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டு,  மூன்று நாட்களாக உணவின்றி கப்பலில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்செயல்களை நினைவு கூறுகிற ஒரு வாரமாக கறுப்பு ஜூலையை  நாங்கள் அனுஷ்டிக்கிறோம்.

இப்பொழுது நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது தங்களுடைய பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார்கள் எங்களை அழிப்பதாக நினைத்துக்கொண்டு இறுதியிலே நாட்டினுடைய பொருளாதாரத்தையும் சீரழித்திருக்கிறார்கள்.

  எங்களுடைய வர்த்தகர்களுடைய பொருளாதாரத்தை அழித்தார்கள். அதனால் பல ஆற்றல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியே போய்விட்டார்கள் அவர்கள் வெளிநாடுகளில் தனவந்தர்களாக  வாழுகிறார்கள். 

இந்த வன்முறைகளினாலேதான் நாட்டிலே அதற்கு பிறகு மூன்று தசாப்த யுத்தமும் நடந்து அதற்கும் பல விதமான செலவீனங்கள் ஏற்பட்டன.

வன்முறைகள் நடைபெறுகிற காலத்திலே கொழும்பில் வாழ்ந்தவன் என்ற ரீதியிலே எனக்கு நேரடியான அனுபவங்கள் உண்டு 77ஆம் ஆண்டிலே அரசாங்கம் வன்முறையாலே பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக தலைநகரிலே வைத்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி எங்களையெல்லாம் விமானத்திலே இலவசமாக அனுப்பி வைத்தார்கள்.

83ஆம் ஆண்டு பயங்கர வன்முறை நடந்த போது நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடி வேறு இடங்களிலே புகலிடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது முதலாவதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிக் கப்பலிலே வந்தவன் நான். 

மூன்று நாட்களாக தொடர்ச்சியாக எதுவித உணவுமில்லாமல் வந்திருந்தேன் ஏனென்றால் 29ஆம் திகதி அந்த கப்பல் துறைமுகத்திலே இருந்து புறப்பட இருந்த வேளையிலே மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள் ஆகையினாலே இனிமேலும் கப்பல் துறைமுகத்திலே இருப்பது பாதுகாப்பில்லை என்று சொல்லி உண்வு இல்லாமலே கப்பல் புறப்பட்டது.

நாங்கள் காங்கேசந்துறைக்கு வந்து சேர்ந்த பிறகு தான் மூன்று நாட்களுக்கு பிறகு முதல் தடவையாக உணவு உட்கொண்டோம் இப்படியான பலவிதமான துன்பங்கள் தொல்லைகளை விட மோசமான துன்பங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கின்றன. எங்களுடைய மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் உடமைகளை இழந்திருக்கிறார்கள்.


என்னுடைய அனுபவத்திலே நான் சொன்னதைப் போல விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் அரசாங்கமே எங்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பது என்பது எங்களுடைய தாயக பூமியிலேதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். 

பல இடங்களிலே நான் தெற்கிலே சிங்கள மக்களோடு பேசுகிற போது இதை சொல்லியிருக்கிறேன். 

தாயகம் என்று சொல்லுகிற போது அது சிலருக்கு பிடிப்பதில்லை நான் இந்த உதாரணங்களைத்தான் சொல்லி சொல்லுகிறேன்., இது என்னுடைய தாயகம் ஆனபடியினால், தான் இங்கே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்டு என்னை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த இரண்டு தருணங்களிலும், ஆகையினாலே நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுடைய தாயகம் என்று சொல்லுவதை மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களே  ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

அதுதான் உண்மை ஆகையினால் தான் எங்களுடைய பாதுகாப்பான பிரதேசங்களில் நாங்கள் எங்களை ஆளுகிறதான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்.

இந்த வாரத்திலே விசேடமாக கறுப்பு ஜூலை அனுஷ்டிக்கிற போது இந்த வன்முறைகளிலே சிக்குண்டு உயிரை இழந்தவர்களையும் உடமைகளை இழந்தவர்களையும் பல விதமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களையும் நாங்கள் உணர்வோடு நினைவு கூற வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

No comments