நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும், முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்து உள்ளதாக, அக் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினோம். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். அதனால் நாங்கள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்
வடக்கு தவிர்ந்து கிழக்கிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம். சிறிய கட்சிகள் சிலவற்றை இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஆனாலும், கட்சியின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு இருப்பேன்.
எமது கட்சியின் முதன்மை வேட்பாளராக அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்துள்ளோம். அவர் தென்மராட்சி மக்களுக்கு சேவை செய்ய கூடியவர். அவரை நிறுத்தவது தொடர்பில் மத்திய குழுவில் பேசி முடிவெடுத்துள்ளோம். அவர் என்னை சந்திக்க வரும் போது , அவருடன் நேரில் பேசி அது தொடர்பில் அறிவிப்போம்
அதேவேளை சட்டத்தரணி மணிவண்ணனும் எமது கட்சியில் போட்டியிடுவார். எமது கட்சி வேட்பாளர்களின் பின்னணிகள் மற்றும் கல்வி தகமை தொடர்பில் ஆராய்ந்து, தகமை உடையவர்களையே வேட்பாளராக நிறுத்துவோம்.
தமிழரசு கட்சியில் சுமந்திரன் கேட்கிறார் என்பதற்காக அவருடன் சேர்ந்து செல்ல முடியாது. தமிழ் தேசியத்தை ஒட்டி நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்திய போது அதற்கு எதிராக செயற்பட்டவர். அப்படி தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவருடன் இணைந்து பயணிக்க முடியாது.
அவருடைய கோரிக்கை அவரின் தனிப்பட்ட நன்மைக்காக தான் என நினைக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.
No comments