2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும், இப்பிறப்பு சான்றிதழ் ஆவணம் ஒருவருக்கு அடிப்படையானது எனவும், பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவமானது எனவும் தெரிவித்தார்.
மேலும், சில பிறப்புச் சான்றிதழ்களை பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள் மத்தியிலும், இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்டப் பிரதி பதிவாளர், பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 41 சிறுவர்களுக்கும், உத்தேச வயதுப்பத்திரம் 05 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 11 பேருக்கும், இறப்பு பதிவு 03 பேருக்குமாக 60 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இந் நிகழ்வில், பிரதிப் பதிவாளர் நாயகம் கே.நடராஜா, மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
No comments