வல்வெட்டித்துறையில் வருடம் தோறும் நடைபெற்று வரும் பட்ட போட்டி , எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வல்லை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்லை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொண்டேன். பல வருடங்களாக இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளது. இது பாராட்டப்படவேண்டிய விடயம். ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என தெரிவித்தார்.
தொடர்ந்து, மழைக்கு மத்தியிலும் போட்டியில் பங்கேற்று, வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு ஆளுநர் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார்.
No comments