எமது காணியே எமக்கு வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து எமது காணியை மீட்டு தாருங்கள் என தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி கோரிக்கை விடுத்துள்ளார்
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி எமது பரம்பரை காணியாகும். அங்கு சட்டவிரோதமாக விகாரையை கட்டி வைத்துள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள ஏனைய காணிகளையும் கையகப்படுத்த முயற்சி எடுக்கின்றார்கள். அதனை அனுமதிக்க முடியாது.
இதற்கு எதிராக நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். எதிர்வரும் 11ஆம் திகதி மாலை முதல் மறுநாள் 12ஆம் திகதி மாலை வரை தொடர் போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளோம்.
எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக அனைத்து கட்சிகளும் கட்சி பேதங்களை கைவிட்டு எமக்காக ஒன்றிணைத்து போராட முன் வரவேண்டும்
அதேவேளை , பொது அமைப்புக்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , சிவில் சமூக அமைப்புக்கள் , சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் எம்முடன் இணைந்து எமது காணிகளை மீட்க போராட முன் வர வேண்டும் என கோரி நிற்கிறோம்.
எமது காணி எமது பரம்பரை காணி என்பதற்கான சகல ஆவணங்களும் எம்மிடம் உள்ளன.ஆனால் தற்போது அது தேவ நம்பியதீசன் காலத்துல விகாரை இருந்தது. அது விகாரை காணி என்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பியுங்கள்.
விகாரையை சூழவுள்ள பகுதியில் உள்ள 14 ஏக்கர் காணியையும் கையளிக்குமாறு பௌத்த அமைப்பு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அதன் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக அறிகிறோம்.
ஆனால் அப்படியொரு கடிதம் தமக்கு வந்தது தொடர்பில் அவர்கள் எவரும் வெளியில் கூறவில்லை. கடந்த மாதம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த போது , கூட அந்த கடிதம் தொடர்பில் அதிகாரிகள் வாய் திறக்கவில்லை. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கூறிய போதும் , மாவட்ட செயலரும் , வடமாகாண ஆளுநரும் , விகாரைக்காக 14 ஏக்கர் காணியை சுவீகரிக்க வேண்டும் என தமக்கு வந்த கடிதம் தொடர்பில் எதுவும் கூறாது மௌனம் காத்திருந்தனர்.
அரச அதிகாரிகள் மௌனம் காத்ததால் தான் சட்டவிரோத விகாரை தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எமது காணிக்குள் அடாத்தாக விகாரை கட்டும் போதே நாம் எதிர்ப்புக்களை தெரிவித்தோம் அது தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டோம்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் விகாரை கட்டப்படுவது தொடர்பில் கதைக்கப்பட்டது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. அதிகாரிகளின் அசமந்த போக்கும் விகாரை கட்டி முடிக்க காரணமாயிற்று.
எனவே இனியாவது எமது காணி தொடர்பில் அசமந்தமாக இருக்காது. எமது காணியை எம்மிடம் மீட்டு தர அதிகாரிகளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எமது நிலமே எமக்கு வேண்டும். அதனை நாம் எவருக்கும் எதற்காகவும் வழங்க மாட்டோம் என உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
No comments