Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாக்கு நீரிணையில் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும் - அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலுக்கு செல்லட்டும் 


பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராளமாக நாட் கணக்காக நங்கூரம் இட்டு நின்று மீன் பிடிக்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி . வி விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

கடந்த 17ஆம் திகதி உள்ளூர்ப் பத்திரிகையில் “இந்திய மீனவர்களால் தொடர்கிறது அட்டூழியம் - வடமராட்சி மீனவர்கள் வேதனை” என்ற தலையங்கம் கொண்ட செய்தியை வாசித்தேன்.

இப் பிரச்சினை நேற்று இன்றையதல்ல. பல வருட காலமாக தீர்வின்றித் தொடரும் ஒரு தொடர்கதை.

நான் முதலமைச்சராக இருந்த போது (2013-2018) டெல்கியில் இருந்து வந்த ஒரு தமிழ் உயர் அதிகாரியுடன் இது பற்றிப் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. திருமதி. Dorai என்பது அவரின் பெயர் என்று நினைக்கின்றேன்.

நாங்கள் எங்களின் பேச்சு வார்த்தையின் பின்னர் சில முடிவுகளுக்கு வந்தோம். மக்கள் இடர் தீர்க்கும் மாண்புமிகு முதலமைச்சராகிய உங்களுக்கு அம் முடிவுகள் எமது மீனவர் பிரச்சினையைத் தீர்க்க உதவியாக இருப்பன என்ற நம்பிக்கையில் அம் முடிவுகளை இங்கே சுருக்கமாகத் தருகின்றேன் -

1. தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் வடமாகாணத் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் நூற்றாண்டு கால தோழமை, அன்னியோன்யங்கள், உறவு முறைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

2. இழுவைப் படகுகள் பாவனைக்கு வரும் வரையில் இவர்களின் உறவுகள் மிக சுமூகமாய் இருந்து வந்தன.

3. காலாதிகாலமாகப் பாவித்து வரப்பட்ட பாரம்பரிய மீன்பிடி வழிமுறைகள் கடல் மாதாவுக்குக் கலக்கம் ஏற்படுத்தாதவாறு அமைந்திருந்தன. இழுவைப்படகுகள் வந்ததும் நிலைமை மோசடைந்தது. அதிகாலையில் தமிழ்நாட்டுக் கரைகளுக்குத் திரும்பிய இழுவைப் படகுகள் கடல்மாதாவுக்கும், கடல் மீன்களுக்கும் மற்றும் கடல் வாழ் ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படுத்திய அட்டூழியங்களை வீடியோ மூலம் அம்மையாரும் நானும் கண்ணுற்றதும் திடுக்கிட்டோம்; திகைப்புற்றோம். தற்போது தமிழ்நாட்டு கரையோரக் கடல் வளங்கள் முற்றும் முழுதுமாகச் சூறையாடப்பட்ட நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்டோம். இதற்குக் காரணம் இழுவைப் படகுகளே என்ற முடிவுக்கு வந்தோம். இவற்றின் பாவனை தொடர்ந்தால் இலங்கையின் கரையோரக் கடல்ப்புறங்களும் மொட்டை நிலையை அடைந்துவிடுவன என்பதை அவதானித்தறிந்து கொண்டோம்.

4. ஆகவே பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராளமாக நாட் கணக்காக நங்கூரம் இட்டு நின்று மீன் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

5. பாக்கு நீரிணையில் மீன்பிடிக்கும் இழுவைப் படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்ல சில கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டுவன. அவற்றை இரு தரப்பு இழுவைப் படகு உரிமையாளர்கள் செய்து முடித்து இழுவைப் படகுகளை ஆழ்கடலுக்கு அனுப்ப வேண்டிய அனுசரணைகளை இருதரப்பு அரசாங்கங்களும் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இது பற்றி அப்போதைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் இலங்கையின் மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருதரப்பாரும் இது பற்றி சிரத்தை காட்டவில்லை. ஆனால் மக்கள் மனம் அறிந்த  நீங்கள் நினைத்தால் பல வருட கால இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்துக் கொண்டுவிடலாம். அரசியல் ரீதியாகவும் அது உங்களுக்கு மீனவர்களிடையே இருக்கும் செல்வாக்கை மேம்படுத்தும்.

இழுவைப் படகுகள் பாக்கு நீரிணையில் பாவிக்கப்படாவிட்டால் காலாதி காலமாக பாரம்பரியமாக பாவிக்கப்பட்ட மீன்பிடி முறைகள் பின்பற்றப்பட்டு தற்போதைய எதிர் நிலையும் பொருளாதார நெருக்கடி நிலைமையும் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம்.

இதனை நீங்கள் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் செய்ய வேண்டியிருக்கும்.

பல இழுவைப் படகுகளின் உரிமையாளர்கள் இருநாட்டிலும் அரசியல் செல்வாக்குப் படைத்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் தொழிலுக்குப் பாதகம் ஏற்படாமல் வறுமையில் வாடும் இரு தரப்பு மீனவர்களின் நலன் பேணி இதனை நடைமுறைப்படுத்தலாம் என்பது எனது பணிவான கருத்து. மக்கட் செல்வரான நீங்கள் மீனவர் நலன் கருதி இது பற்றி சிந்தித்துச் செயலாற்றுவீர்கள் என்று நம்புகின்றேன் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

No comments