Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மக்களின் காணி மக்களுக்கே - தையிட்டி போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு


தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்   டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எந்தவொரு விடயத்தினையும் நடைமுறைச் சாத்தியமான வழியில் அணுகுகின்றவர்கள் என்ற அடிப்படையில், குறித்த விகாரை அமைந்துள்ள பகுதியை அளவீடு செய்து, முதற்கட்டமாக, அப்போது விகாரை கட்டுமானங்கள் அமைந்திருந்த சிறு பகுதியை தவிர ஏனைய பகுதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னடுத்திருந்தோம்.

அதற்கு, பாதுகாப்பு அமைச்சு, படைத் தரப்பு மற்றும் சம்மந்தப்பட்ட விகாராதிபதி போன்றோர் சம்மதமும் தெரிவித்திருந்தனர்.

எனினும், அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அளவீட்டு பணிகள் பல தடவைகள்  இடைநிறுத்தப் பட்டிருந்தன. 

அக்காலப் பகுதியில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளியாகி, ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றமையினால், துரதிஸ்டவசமாக எம்மால் அந்தப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.

எனினும், மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பாதுகாப்பு தரப்பு போன்றவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களினால் முன்னெடு்க்க தீர்மானிக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்கவுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments