வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்குரிய சட்டநடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் போது, சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள், பொலிஸாரின் ஆதரவைக் கோரினர்.
அத்துடன் சில கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அது சட்டவிரோதமானது அல்லது அனுமதிக்குமாறானது என தெரியவரும்போது அதனை தடுத்துநிறுத்துவதற்கான கட்டளையை ஒட்டினால், விடுமுறைநாள்களில் அந்தக் கட்டுமானத்தை நிறைவு செய்கின்றார்கள் எனவும் உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர்.
இவை தொடர்பில் உரிய முறையில் பொலிஸாருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான சட்டநடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ஆளுநருக்கு பொலிஸார் தெரியப்படுத்தினர். எதிர்காலத்தில் அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர், உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்களுக்கு அறிவுறுத்தினார்.
No comments