காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை வரணி, நாவற்காட்டில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நிலையத்தில் நடைபெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நிலையத்துக்கான நினைவுக்கல் ஆளுநர், பிரதம செயலர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் நிலையம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் போத்தல் கள் அடைக்கும் நிலையத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார்.
நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர்,
கூட்டுறவுத்துறையில் வடக்கு மாகாணமே ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் விளங்கியது. ஆனால் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இன்னமும் மீண்டு வரமுடியாமல் இருக்கின்றன.
ஆனால் உங்களைப் போன்ற பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாகவே செயற்படுகின்றன. நான் தெல்லிப்பழையில் பிரதேச செயலராக இருந்தபோதும், யாழ்ப்பாண மாவட்டச் செயலராகக் கடமையாற்றியபோதும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்காக பல்வேறு இயந்திரங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.
இன்று உங்களின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்றுமதியாளர் தயாராக இருக்கின்றார். நீங்களும் ஏற்றுமதியை நோக்கி உங்களின் உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.
உற்பத்தியார்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களுக்கு கூடிய விலை கிடைக்கும்போதுதான் அவர்கள் அந்த உற்பத்தியை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். எனவே நீங்களும் எதிர்காலத்தில் நவீன கருவிகளை உள்வாங்கி உங்கள் உற்பத்தியை அதிகரித்து அதன் ஊடாக உங்கள் ஒவ்வொருவரது குடும்பங்களின் வாழ்வாதாரமும் மேம்பட வாழ்த்துகின்றேன் என ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments