யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி பகுதியில் அமைந்துள்ள அறுபது பாகம் கிணறு, பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்ததுடன், இப்பகுதியின் பண்பாட்டு மரபையும் பல்லவர் கால வரலாற்றையும் பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்த கிணறு தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுவதாலும், பாழடைந்த நிலையில் உள்ளது. சுற்றுப்புறம் அடையாளம் தெரியாமல் சூழப்பட்டுள்ளது.
இக்கிணற்றைப் புதுப்பித்து, வரலாற்று அடையாளமாகவும் சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை அடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கிணற்றின் நிலைமையை நேரில் அவதானித்ததுடன் , அப்பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் நேரில் கேட்டு அறிந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இக்கிணற்றை முறையாக புனரமைத்து, சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி, வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், ஏதேனும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைத்து இந்தப் பகுதிக்கு நவீன சீரமைப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்தி, சட்டப்பூர்வமாக முறையான அனுமதிகளைப் பெற்று, புனரமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.
புலோலி அறுபது பாகம் கிணறு, ஒரு ஊரின் உணர்வுப் பிணைப்பு மட்டுமன்றி, வரலாற்றையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சின்னமாக விளங்குகிறது. அதன் நிலைமையை மாற்ற மக்கள் முன்வைத்துள்ள இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிக்கபட்டுள்ளதுடன், விரைவில் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments