Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் நிலையில் ...


முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போகப்போகின்றது. மாணவர்களை இப்போதே சரியான துறைகளைத் தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்காவிடின் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும்.என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை  மூன்றாம் நாளின் காலை அமர்வில் - சாதனையாளர் கௌரவிப்பில், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அபிராமி இராஜதுரை கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். 

கல்லூரி முதல்வர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். தேசியக் கொடி, கல்லூரிக்கொடி, 150ஆவது ஆண்டு நிறைவுக் கொடி என்பன ஏற்றப்பட்ட பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதன் போது, ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், 

நான் சிறுவனாக படித்துக்கொண்டிருந்தபோது உங்கள் பாடசாலையின் ஹொக்கி அணி பிரபலமாக இருந்தது எனக்கு இப்போதும் நினைவிருக்கின்றது. உங்கள் பாடசாலை நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றது. அர்ப்பணிப்பான அதிபர்களால்தான் இடப்பெயர்வுகள் உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்தாலும் பாடசாலை தலைநிமிர்ந்து நிற்கின்றது.  

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. மாணவர்கள் அனுமதி குறைவடைந்து செல்கின்றது. எமது சனத்தொகை முன்னரைவிட பல மடங்கு வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதம் குறைகின்றது. இதற்கும் அப்பால் வெளிநாட்டு மோகம் எம்மவரிடையே இன்றும் இருக்கின்றது. இவை எல்லாம் இணைந்து எமது மாகாணப் பாடசாலைகளின் மாணவர் அனுமதியில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.  

எங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறான துறைகளைத் தெரிவு செய்யவேண்டும் என்ற போதுமான வழிகாட்டல்கள் வழங்கப்படவேண்டும். விஞ்ஞான, கணித துறைகளைத் தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து செல்கின்றது. அவ்வாறு விஞ்ஞான மற்றும் கணிதத் துறைகளைத் தெரிவு செய்தாலும் அவர்கள் மருத்துவர்கள் அல்லது பொறியலாளர்கள் என்ற நிலையைத்தான் தெரிவு செய்கின்றார்களே ஒழிய அதற்கு அடுத்த நிலையிலுள்ள துறைகளைத் தெரிவு செய்யவில்லை. 

இதனால் எமது மாகாணத்தில் இருக்கின்ற துணை மருத்துவ வெற்றிடங்கள் உள்ளிட்ட பலவற்றை நிரப்புவதற்கு வேறு மாகாணங்களிலிருந்து ஆட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.  

புதிதாக நியமனம் பெற்ற இளம் அதிபர்கள் பலரும் அவர்கள் பொறுப்பேற்ற பாடசாலைகளில் சொல்லிக்கொள்ளதக்களவு மாற்றங்களை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சின் செயலர் எனக்கு கூறியிருந்தார். அதனை வரவேற்கின்றேன். அதிபர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், சிறந்த தலைமைத்துவத்தை பாடசாலைக்கு வழங்கினால் முன்னேற்றத்தை நாம் கண்ணூடாகக் காணலாம்.  

எங்களுடைய சமூகத்தில் வழிகாட்டிகளாக இருந்தவர்களின் பாதைகளை நாங்கள் பின்பற்றத் தவறுவதனால்தான் இன்றைய இளைய சமுதாயம் பிறழ்வான பாதையை நோக்கிச் செல்கின்றது. மாணவர்கள் கூடுதலாக பாடசாலையை விட்டு இடைவிலகும் சூழலும் ஏற்படுகின்றது. இதைச் சீர் செய்யத் தவறினால் நாம் எதிர்கால சந்ததிக்குச் செய்யும் தூரோகமாகும். இதைமாற்றும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கின்றது.  

மாணவர்களுக்கு இலக்கு இருக்கவேண்டும். கல்வியில் எதைச் சாதிக்கப்போகின்றோம் என்ற தூர நோக்கு இருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை கல்வியில் வளப்படுத்துவதுடன் மாத்திரமல்லாது தலைமைத்துவத்தையும் வளர்த்துவிடவேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்பையும் ஆளுநர் வழங்கிவைத்தார். 





No comments