உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இராணுவ மரியாதை அணிவகுப்புக்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு கலந்துரையாடல்களுக்கு பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சனிக்கிழமை (5) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, திருகோணமலை எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய வகையில் 8 ஒப்பந்தங்கள் அன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளது.
அதுமாத்திரமின்றி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் அரசியல் தரப்புகளுடனான சந்திப்பு சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்புகளின் பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கும் விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (6) காலை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்து, ஸ்ரீ மகா போதியில் ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி, வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படவுள்ள சம்பூர் சூரிய சக்தி மின்னுற்பத்தி பூங்கா உட்பட திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடல்களில் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை முக்கிய விடயமாக கருத்தில் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments