Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். மாநகர சபையில் வீணை சின்னத்திற்கு வாக்களியுங்கள் - தொழிலதிபர் சுலக்சன் கோரிக்கை


யாழ்ப்பாண மாநகர சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கே தமது ஆதரவு என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் , 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எனது தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபையில் சுயேச்சை குழுவாக வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தோம். 

எமது பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் சிறு தவறு காணப்பட்ட நிலையில் , எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எமது வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரி நாம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தோம். உயர் நீதிமன்றம் எமது மனுவை நிராகரித்தது. 

அதேவேளை எமது தவறை ஒத்த தவறுகள் காணப்பட்ட வேறு கட்சிகள் , சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாறு , தேர்தல் திணைக்களத்திற்கு கட்டளையிட்டு இருந்தது. 

ஒரு நீதிமன்றில் எமது தவறை ஒத்த தவறு விட்டவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டதால் , எமது வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணைக்குழுவிடம் எமது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தோம். 

ஆனால் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற கட்டளை உள்ளவர்களின் மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என கூறியமையால் நாமும் கடந்த 15ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தோம். எமது மனு மீதான விசாரணை 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு இருந்தது. 

மிகுந்த நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த போது , கடந்த 21ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , கால தாமதம் என தேர்தல் திணைக்களம் தமது பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்ததமையால் , மேல் முறையீட்டு நீதிமன்றம் எமது மனுவை தள்ளுபடி செய்தது. 

எமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டமை பேரதிர்ச்சியை தந்தது. 

இந்நிலையில் எனது ஆதரவை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஆழமாக சிந்தித்து , கடந்த காலங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை எமது பிரதேசத்திற்கும் எமது மக்களுக்கும் செய்த தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துவோம் எனும் தீர்மானத்திற்கு , வந்து எனது ஆதரவினை ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்குவது என தீர்மானித்துள்ளேன்.

எனவே இம்முறை யாழ் . மாநகர சபை தேர்தலில் வீணை சின்னத்திற்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments