கடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபிளவு பகுதிக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அப்பகுதி கடற்தொழில் சங்க தலைவரை அவரது வீட்டுக்கு சென்று, வெளியே அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதன்போது, கடற்தொழில் சங்க தலைவர், கடற்கரைக்கு செல்லும் வீதியினை புனரமைத்து தருமாறு நீண்ட காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடமும் கோரிக்கை முன் வைத்து யாரும் அதனை புனரமைத்து தரவில்லை. வருபவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எம்மை நாடி வந்த பின்னர், தேர்தல் முடிய எமது பிரதேசத்திற்கு வருவதில்லை. எந்த அரசியல்வாதிகளையும் நாம் நம்ப மாட்டோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்போது, அமைச்சருடன் இருந்த அவரது சாரதி ஒரு அமைச்சருடன் இவ்வாறா கதைப்பது என கூறி, அமைச்சரின் கண் முன்னாலையே கடுமையாக தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது, மிக அசண்டையீனமாக சைகையை காட்டி, நிகழ்வு தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என பதிலளித்துள்ளார்.
No comments