வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போதே அவ்வாறு முறையிட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில்,
இளைய சமூகத்தை வழிப்படுத்தும் வகையில் அறநெறிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான யோசனை தொடர்பிலும் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் எடுத்துக்கூறினர்.
குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்வி செயற்பாடுகளையும் வெள்ளி மாலையும், ஞாயிறு மதியம் வரையிலும் மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அறநெறி வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் அறநெறி வகுப்புக்கான வருகை மற்றும் செயற்பாடுகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில பாடசாலைகளில் மாணவர்களை சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடைவிதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன அதற்கான ஆதாரங்கள் உண்டு. என ஆதாரங்களையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
No comments