யாழ்ப்பாணத்தில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி , பலாலி பொலிஸார் வாக்குறுதி வழங்கியுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்தே சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் , அதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாருக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார்.
அந்நிலையில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுவோர் , தம்மை மயிலிட்டியில் இருந்து சேவைகளை ஆரம்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி இன்றைய தினம் புதன்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதன் போது அவர்களுடன் பேச்சுக்களை நடாத்திய பலாலி பொலிஸார் . வழமை போன்றே மயிலிட்டியில் இருந்து சேவைகளை ஆரம்பியுங்கள் என அனுமதி வழங்கியதை அடுத்து , அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் , 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக இன்றைய தினம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.
No comments