தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக பிரதேச சபைகளுக்காக எழுதி வெளியிடப்பட்ட பிரசார பாடல்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சி மறுத்துள்ளது.
குறித்த பாடல்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்த நிலையில், அக்கட்சிக்கோ , கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கோ எந்த தொடர்பும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , புலிகளின் தலைவரின் பெற்றோரின் பெயர்களை இறங்குதுறைக்கு சூட்டுவோம் உள்ளிட்ட சில கருத்துக்கள் காணப்பட்டிருந்தது.
அவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்கவை தொடர்பு கொண்டு கேட்ட போதே பாடலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கடற்தொழில் அமைச்சரின் ஊடக சந்திப்பில் , ஊடகவியலாளர்கள் குறித்த பாடல் தொடர்பில் அமைச்சரிடம் கேட்ட போது , தான் அந்த பாடலை கேட்க வில்லை என கூறிய போது , ஊடகவியலாளர்களால் பாடல் போட்டு காட்ட பட்ட போது , அந்த பாடலுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லை என கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments