நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அவ்வாறே குறித்த உணவகத்திற்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் அவர்கள் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் , அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார்கள். அவற்றினை ஆராய்ந்து அனுமதிகள் கொடுப்பதா இல்லையா எனும் முடிவு எடுக்கப்படும். அனுமதி கொடுக்க ஏதுவான காரணம் இல்லை எனில் , நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உணவகத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நல்லூர் ஆலய சூழலை புனித பிரதேசமாகவும் , ஆலய சூழலில் குறிப்பிட்ட சுற்று வட்ட பகுதிக்குள் அசைவ உணவகங்கள் , கோளிக்கை உள்ளிட்டவை அமைக்கப்பட கூடாது என சபையில் தீர்மானம் நிறைவேற்றி , உப விதிகளை உருவாக்கினாலே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் , எனவே புதிதாக சபையை அமைத்து ஆட்சி செய்யவுள்ள மாநகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பான தீர்மானத்தை சபையில் நிறைவேற்ற வேண்டும் என நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments