வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு, கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து , குறித்த நபரின் வீட்டினை சோதனை செய்தபோது, துப்பாக்கி ரவைகள் மற்றும் போலீஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளும் மீட்கப்பட்டன.
T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296 ரவைகள், 12-போர் வகையின் 27 ரவைகள், M-16 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 ரவைகள், T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகளின் தொகுப்பு, T-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124 பயிற்சி ரவைகள், 9 மிமீ தானியங்கி கைத்துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட T-56 வெற்று ரவைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேக பொருட்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் மற்றும் காலில் அணிந்திருந்த துப்பாக்கிக்கான கொள்கலன் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன
பொலிசாரின் மேலதிக விசாரணைகளில், வீட்டின் உரிமையாளர் ஒரு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை வீரர் என்பதும், அவர் இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதனை அடுத்து, வீட்டின் உரிமையாளரான சிறப்புப் படை வீரரும் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments