இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக திரும்பியுள்ளனர்.
அவர்கள் நால்வரையும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று அழைத்து வந்துள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆறு பேரையும் முற்படுத்திய போது , அவர்களை 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை , இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய நால்வரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் மன்று பணித்துள்ளது
No comments