புத்தரின் புனித எச்சங்களுடன் புதைக்கப்பட்டிருந்த மாணிக்கங்கள் மற்றும் பிற கல் அணிகலன்களின் தொகுதியை ஏலத்தில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி, அந்த கலைப்பொருட்களை இந்தியாவிற்கு திருப்பி அளிக்குமாறு கோரி, ஹொங்கொங்கில் உள்ள சோதேபி’ஸ் ஏல நிறுவனத்திற்கு இந்தியா சட்டரீதியான அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
1898 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பிப்ரஹ்வா பகுதியில் உள்ள ஸ்தூபியில், புத்தருடையது என அடையாளம் காணப்பட்ட புனித எச்சங்கள், முத்து, மாணிக்கம், நீலமணி, தங்கம் உள்ளிட்ட சுமார் 1,800 அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த பொருட்கள் நாளை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், சோதேபி’ஸ் நிறுவனம் இவற்றின் மதிப்பை 100 மில்லியன் ஹொங்கொங் டொலர்களாக (சுமார் 379 கோடி ரூபாய்) மதிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கலாசார அமைச்சு, ஏலம் தொடர்பான தகவல்களை சேகரித்து, இது குறித்து சோதேபி’ஸ் நிறுவனத்திற்கு அறிவித்து சட்டரீதியான கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (Archaeological Survey of India) ஹொங்கொங் துணைத் தூதரகத்திற்கு அறிவித்து, இந்த ஏலத்தை உடனடியாக நிறுத்துமாறும், இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.
No comments