காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
வடக்கில் வவுனியா தவிரந்த நான்கு மாவட்டங்களில் 5,940 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் தொடர்ந்து ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தோம்.
மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து உரித்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டை அரசு மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.
இவ்வாறான நிலையில் அரசு காணி அமைச்சின் மூலம் ஒரு கடிதம் வெளியிட்டபோதும் அது சட்ட வலுவற்றதாகவே பார்க்கப்படும். பிரதமர் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதும் ஓர் உறுதியான பதிலையோ அல்லது வர்த்தமானியை இரத்துச் செய்யும் நம்பிக்கையையோ வழங்காதமையால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகவுள்ளோம்.
இதன் முதல் கட்டமாக 4 மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களின் நில உரித்தாளர்களுக்குத் தேவையான இலவச சட்ட உதவிகளை வழங்கும் வகையில் அந்த இடங்களுக்கே சட்டத்தரணிகள் குழாம் நேரில் சென்று சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே நேரம் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் பணிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.







No comments