டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடுத்த அழைப்பின் பேரில் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தொற்றாநோய் திணைக்களம் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரத்தினபுரி வைத்தியசாலை தொடர்பில் அண்மைய நாட்களில் பதிவாகியிருந்த நிலைமைகள் மற்றும் தீவின் அபாயகரமான மாவட்டங்களில் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்பட்டது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதன்போது, அந்த திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர, பிரதம தொற்றுநோய் நிபுணர் ஹசித திசேரா மற்றும் அந்த திணைக்களங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
No comments