செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிகள் தவிர மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து ஒன்றரை அடி, இரண்டடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன.
இது சாதாரணமாக 'மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட' இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன.
இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது. எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது.
இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தினமும் அவதானிக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
No comments