யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளார்.
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை ஈ தாக்கம் கடுமையாக ஏற்பட்டிருந்தது.
பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தப்பட முடியாதளவுக்கு பெருகியுள்ளது. பல தென்னைகளில் உற்பத்தி பூச்சியமாகியுள்ளது.
எமது மக்கள் தங்கள் வீட்டுத் தேவைக்கு அப்பால் தேங்காய் விற்பனை ஊடாக சிறிய வருமானத்தையும் பெற்று வருகின்றனர். அவற்றுக்கும் வெள்ளை ஈ தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தென்னை முக்கோண வலயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்தில் தென்னை உற்பத்தியை இங்கு அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
No comments