திருகோணமலை – சம்பூர் கடற்கரையை அண்மித்த பகுதியில், மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மிதிவெடி அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடைநிறுத்தப்பட்டது.
அது தொடர்பில் பொலிஸார் ஊடாக மூதூர் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டதை அடுத்து, மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு மிதிவெடி அகழும் பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments