மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் கடந்த காலத்தில் பல்வேறு பத்திரிகையில் கடமையாற்றியதோடு 1999 ஆம் ஆண்டு முதல் இறுதி யுத்தக்காலம் வரை புலிகளின் குரல், தமிழீழ வானொலி என்பவற்றில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்.
யுத்தக் காலப்பகுதியில் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் புலிகளின் குரல் வானொலி ஊடாக யுத்தச் செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு போய் சேர்ப்பதில் முன்னின்றுழைந்தவர்.
புலிகளின் குரல் வானொலியில் செய்திகளை வழங்குவதற்கு அப்பால் விடுதலைப் போராட்டம் தொடர்பான பல்வேறு நிகழ்சிகளுக்கு குரல் வழங்குபவராக செயற்பட்டிருந்தார்.
இறுதி யுத்தக் காலத்தில் விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் யுத்த நகர்வுகள், யுத்த இழப்புக்களை செய்திகளாக்கி மக்கள் மத்தியில் கொண்டுபொய் சேர்ப்பதில் திறமையாகச் செயற்பட்டார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் யாழ்.தினக்குரல், வலம்புரி, தினகரன், தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களிலும் பிரதேச செய்தியாளராக பணியாற்றினார்.
நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் பிரதேச செய்திகளை வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments