வாழ்வில் நிம்மதியான – சந்தோசமான பருவம் என்பது பாடசாலை மாணவர் பருவமே. அதைப்போன்ற காலம் வாழ்வில் மீண்டும் வராது. ஏத்தகைய உயர் பதவிகளிலிருந்தாலும் கிடைக்காத சந்தோசமும் - நிம்மதியும் பாடசாலைப் பருவத்தில்தான் கிடைக்கும். அதை உணர்ந்து மாணவர்கள் கற்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் சிவஞானசோதி கலையரங்கில் பாடசாலை அதிபர் த.தயானந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலன் சிறப்பு விருந்தினராகவும், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரும் பழைய மாணவனுமான க.நித்தியானந்தம் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள், பதங்களை வழங்கிய ஆளுநர் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலையில் மாத்திரம்தான் கல்வி பயின்றோம். அன்று தனியார் வகுப்புக்களுக்குச் சென்றது கிடையாது. அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் எங்களுக்கு கற்பித்தார்கள். அவர்கள்தான் இன்றும் எங்களுக்கு முன்மாதிரியானவர்களாக இருக்கின்றார்கள்.
பாடசாலைகளாகட்டும் எந்தவொரு நிறுவனங்களாக இருக்கட்டும் அங்கு தலைமைத்துவம் சரியாக அமைகின்றபோது அவை எழுச்சியடைகின்றன. எனவே நாங்கள் மாணவர்களுக்கு கல்வியை மாத்திரம் புகட்டாமல் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
எந்தவொரு உயர் பதவியைப் பெற்றாலும் அவர்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிடின் மதிக்கப்பட மாட்டார்கள். இன்றைய இந்த மாணவர்கள்தான் நாளை உயர் பதவிகளை அலங்கரிக்கப்போகின்றவர்கள். அவர்களுக்கு இன்றே நல்ல பண்புகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும். அவர்கள் நாளைக்கு பலருக்கு முன்மாதிரியானவர்களாகச் செயற்படக்கூடிய அளவுக்கு வளர்த்துவிடவேண்டியது எங்கள் கடமை.
நான் மாவட்டச் செயலராக வடக்கின் 4 மாவட்டங்களில் பணியாற்றியிருக்கின்றேன். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலங்களில் என்னுடன் மிகச் சிற்பான அலுவலர்கள் பணியாற்றினார்கள். இன்று ஆளுநராகப் பதவி வகிக்கின்றபோதும் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கிடைத்த சந்தோசம் கிடைக்கவில்லை.
ஒரு சில அலுவலர்கள் தங்களுக்கு கிடைத்த பதவிகளை, அது தமக்கு நிரந்தமானது என்ற எண்ணத்துடன் மக்களுக்கான சேவைகளை மறந்து செயற்படுகின்றார்கள். அந்தப் பதவிக் கதிரையைப் பயன்படுத்தி எப்படி தமக்கான தனிப்பட்ட நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமோ அதைப் பெற்றுக்கொள்வதற்கு காட்டும் முனைப்பை மக்களுக்கு சேவைசெய்வதற்கு வெளிப்படுத்துவதில்லை.
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடையாது. பழிவாங்கப்படுவார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் நேர்மையானவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்கும் என நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் நிம்மதியாகப் பணியாற்ற முடிகின்றது என தெரிவித்தார்.
No comments