இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% தீர்வை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் வெள்ளை மாளிகையால் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதற்கு ஒரு சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் நேற்று (9) முடிவடைந்த நிலையில், 2025 ஓகஸ்டு முதலாம் திகதி முதல் 30% வரி விதிக்கப்படும் என டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனது வரிகளை உயர்த்தினால், அந்த வீதம் தற்போதைய 30% வரியுடன் சேர்க்கப்படும் என டிரம்ப் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக விதிக்கப்பட்ட 44% வரியை 30% ஆக குறைத்தது நேர்மறையான அணுகுமுறை என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் இலங்கைக்கு மிகப்பெரிய வரிக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.
இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராஜதந்திர மத்தியஸ்தத்தின் விளைவு என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையுடன், மேலும் ஆறு நாடுகளுக்கு நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை அறிவித்தார்.
அதன்படி, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியாவுக்கு 30% வரியும், புருனை மற்றும் மால்டோவாவுக்கு 25% வரியும், பிலிப்பைன்ஸுக்கு 20% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மேலும் 14 நாடுகளுக்கு புதிய வரிகளை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக, பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
No comments