பாடசாலைகளில் திண்மக் கழிவு முகாமைத்துவம் அவசியம் எனவும் மாணவர்களுக்கு அதனை முறையாக பழக்கப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் பாடசாலைப் பிரிவுப் போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் அளவுகோல்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டசெயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
உற்பத்தித்திறன் சார்ந்த போட்டி மற்றும் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்தது எனவும், பாடசாலைகளில் உற்பத்தித் திறன் செயற்பாட்டின் மூலம் அடைவு மட்டங்களை அறிந்துகொள்வதுடன், முன்னேற்றமான பாதையில் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டதுடன், இச் செயலமர்வுக்கு ஆர்வத்துடன் பங்கேற்றமைக்காக தமது பாராட்டுக்களை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகளின் கட்டமைப்பில் முன்னரைவிட மாற்றம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் திறன் செயற்பாட்டிற்கு தலைமைத்துவத்தின் பங்கும் அனைவரும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் அவசியம், பாடசாலைகளில் அவர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைக்கூறுகளை நேர்த்தியாக செய்வதன் ஊடாக இலக்குகளை அடைய முடியும்.
சில பாடசாலைகளில் மாணவர்கள் விபரங்கள் கணினி மயப்படுத்தியதன் மூலம் விபரங்கள் இலகுபடுத்தியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் நேரசூசி கூட கணினி மயப்படுத்தி நிர்வாக நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளில் திண்மக் கழிவு முகாமைத்துவம் அவசியம் எனவும் மாணவர்களுக்கு அதனை முறையாக பழக்கப்படுத்த வேண்டும்.
அதன் ஊடாக பாடசாலைகளில் ரம்மியமான - இயற்கையான சூழல் இருத்தல் வேண்டும் என்பதுடன் வகுப்பறைகள், அலுவலகங்களின் சூழலும் மற்றும் வெளிச்சூழலும் அழகாக இருத்தல் வேண்டும். இதனால் மாணவர்களின் அகச் சூழலில் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை நேரமுகாமைத்துவத்தின் அவசியத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும் இதனால் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அடைய முடியும்.
உற்பத்தித் திறன் செயற்பாட்டை மாணவர்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தி வழிப்படுத்த வேண்டும். இதன் ஊடாக மாணவர்கள் சமூகத்திலும் உற்பத்தித் திறன் செயற்பாட்டை எடுத்துச் செல்வார்கள். இதனால் சமூகமும் நாடும் வளர்ச்சி அடையும். அதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பு தேவை என தெரிவித்தார்.
இச் செயலமர்வில் தேசிய உற்பத்தி செயலகத்தின்பிரதிப் பணிப்பாளர் திலானி சுகந்திகா லியனகே உற்பத்தித் திறன் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் உ. சி. அனுஷியா, தேசிய உற்பத்தித் திறன் செயலக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments