நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.
காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.
அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன திருவிழா இடம்பெறவுள்ளது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை காலை கஜவள்ளி மகாவள்ளி உற்சவமும் , மாலை தங்கரத உற்சவமும் , நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழ திருவிழாவும், அன்றைய தினம் மாலை ஒரு முக திருவிழாவும் , மறுநாள் புதன்கிழமை மாலை சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
இவ்வாரம் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால் , நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான மக்கள் நல்லூர் திருவிழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் நல்லூர் ஆலய சூழலில் , 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments