நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது.
நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இதற்கமைய நேற்றைய தினம் சனிக்கிழமை குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது.
இதற்கமைய நாளைய தினம் திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும்.
அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து , குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது
No comments