Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வளங்கள் வடக்கில் சரியாக பரவலாக்கப்பட வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்.


வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, வடக்கு மாகாணத்தின் கல்விப்புலத்தில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை ஆளுநர்  முன்வைத்தார். அத்துடன் ஏனைய சில ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். 

ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு குறிப்பாக ஆசிரிய நியமனத்துக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் இதன்போது விவரித்தார். 

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள மாணவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், வளங்கள் வடக்கில் சரியாக பரவலாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

அத்துடன் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணம் பின்னடைவைச் சந்தித்தமை கரிசனைக்குரியது என பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இடமாற்றங்களின்போது வடக்கு மாகாணம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆளுநர் விளக்கமளித்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏனைய 4 மாவட்டங்களுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும் செல்லவேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும், எல்லோரும் யாழ்ப்பாணத்தில் பணி செய்வதையே அதுவும் வீட்டுக்கு அருகில் பணி நிலையம் கிடைப்பதையே விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். 

வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள் கூட தினமும் சென்று வருவதையே விரும்புகின்றனர் எனவும் அங்கு தங்கி கற்பிப்பதற்கு தயாரில்லை என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்த மனநிலை மாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது என ஆளுநர் தெரிவித்தார். 

சந்திப்பைத் தொடர்ந்து பிரதமருக்கு ஆளுநரால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், நிரல் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், நிரல் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள், பெருந்தோட்டப்பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் ச.பிரணவதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.    







No comments