மூன்றாம் நபர் தலையீடின்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனையே மட்டுவில் பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதைக் கருதிலெடுத்தே இந்தப் பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நபர் தலையீடின்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருந்தது.
போருக்கு முன்னைய காலங்களில் கிளிநொச்சியில் இரவு நேரச் சந்தை கூட இருந்தது. தென்பகுதியிலிருந்து வரும் வர்த்தகர்கள் அங்க பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் நடந்தது. இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக மீள ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனை அடுத்து, பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். தமக்குரிய வசதிகளை ஒழுங்குபடுத்தித் தருவதுடன், தமது நிலையத்தை பிரபல்யப்படுத்தித்தர வேண்டும் என்றும் கோரினர்.
No comments