மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும்.
இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும், இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என மேலும் தெரிவித்தார்.
No comments