நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களை எப்போதும் மக்கள் சந்தித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற வகையில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், ஆணையாளர்களுக்கான 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் கீழான விழிப்புணர்வு செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர்,
தூய்மை இலங்கை செயற்றிட்டம் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. எங்களது சேவைகளின் தரமும் உயரவேண்டும். மக்களுக்கு சிநேகபூர்வமான, விரைவான, தரமான சேவைகளை நீங்கள் வழங்கவேண்டும். மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
கடந்த காலங்களில் மக்கள் சோலை வரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி ஆகியனவற்றுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதை மாற்றியமைக்கவேண்டும். எங்களுக்கான தேவைகளை எப்படி விரைவாக நிறைவேற்றிக்கொள்கின்றோமோ அதைப்போல மக்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். அத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதுவும் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
மக்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும், என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுகந்தி மற்றும் ஜனாதிபதிக்கான மூத்த உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments