புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதிகளின் மேல் முறையீட்டை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.
புங்குடுதீவை சேர்ந்த மாணவியை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் "ட்ரையல் எட் பார்" முறையில் நீதிபதிகளான சசி மகேந்திரன் , ம. இளஞ்செழியன் மற்றும் அ.பிரேமசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று சுவிஸ் குமார் என அழைக்கப்படும் , சுவிஸ் நாட்டை வதிவிடமாக கொண்ட , சசிகுமார் என்பவர் உள்ளிட்ட 07 பேரை கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி குற்றவாளிகளாக கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த தண்டனை தீர்ப்பானது 300 பக்கங்களை கொண்டதாக அமைத்திருந்தது.
இந்நிலையில் மரண தண்டனை கைதிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது தண்டனைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள நிலையில் , அது தொடர்பிலான மனுவினை நேற்றைய தினம் திங்கட்கிழமை,
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்பை பெற நான்கரை ஆண்டுகளுக்கு மேலானது என பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , மன்றில் சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணைகளை குறுகிய கால திகதிகளிட்டு முன்னெடுக்க வேண்டும் என மன்றில் கோரினர்.
அதனை அடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக நீதியரசர்கள் திகதியிட்டுள்ளனர்.
No comments