வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
பதில் பிரதம செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார். தொடர்ந்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, உள்ளூராட்சி மன்றங்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தினார்.
அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் தமது சபைகளின் தேவைப்பாடுகள், சவால்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கட்டடங்கள், வாகனங்கள், கனரக வாகனங்கள், வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையால் இலங்கையில் ஏனைய மாகாணங்களில் ஒருவிதமான நடைமுறையும் வடக்கு மாகாணத்தில் வேறொரு விதமான நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது சபைகளுக்கு தெரியப்படுத்தி அதனை முன்னெடுக்குமாறும் கோரினர். உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக சபைகளின் வருமானத்தில் சம்பளம் வழங்குவது தொடர்பான விடயத்தில் தளர்வு தேவை எனவும் சபைகளின் தவிசாளர்கள் வலியுறுத்தினர்.
இதன் பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன மற்றும் பிரதி அமைச்சர் ருவான் செனரத் ஆகியோர் பதிலளித்து கருத்துத் தெரிவித்தனர்.
மக்களின் அபிவிருத்தியே தமது எதிர்பார்ப்பும் என்றும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் கோரினர்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் சேவைகளைச் செய்வதற்காக பாராட்டுவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், இலங்கை முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேவைப்பாடுகள், கோரிக்கைகள் ஒன்றாகவே உள்ளன எனவும் அவற்றை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.
எதிர்காலத்தில் இன்று முன்வைத்த பிரச்சினைகள் பாதியாகக் குறைந்துவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில், மேயர்கள், தவிசாளர்கள், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூhட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments