Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாற்றத்தை ஏற்படுத்துவது கடினமே - விடாமுயற்சியுடன் முயன்றாலே முடியும்


மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் 'இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு' என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய ஆளுநர், 

அரசாங்கம் மூன்று விடயங்களில் பிரதானமாக கவனம் செலுத்தியுள்ளது. வறுமைத்தணிப்பு, எண்ணிமம்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்), தூய்மை இலங்கை என்ற அந்த மூன்று விடயங்களில் தூய்மை இலங்கை என்ற செயற்றிட்டம் மிகப் பிரதானமானது. 

எமது சுற்றாடலையும், எம்மையும் சுத்தமாக வைத்திருப்பது மாத்திரம் இதன்நோக்கம் அல்ல. எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தனி நபரிலிருந்து அது ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். 

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். எதிர்கால தலைமுறையை உருவாக்குகின்றவர்கள் நீங்கள். ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறப்பான தலைமைத்துவத்தை தங்கள் பாடசாலைகளுக்கு வழங்கினாலே போதும். 

தலைமைத்துவம் மிக முக்கியமானது. சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிறுவனங்கள் மேலோங்கிச் செல்வதை நாங்கள் பல இடங்களில் நேரில் கண்டிருக்கின்றோம். 

எனவே, ஒவ்வொரு பாடசாலை அதிபரும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும். அதன் ஊடாக எதிர்காலச் சந்ததியினரான மாணவர்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஆளுநர் தெரிவித்தார். 

இந்தச் செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்








No comments