Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 05 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்


தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி நாளைய தினம் வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 

குறித்த போராட்டத்தை செம்மணி வளைவு பகுதியில் செய்யவிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எமது உறவுகள் அங்கு வருகை தந்து ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

நாளைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் ஆரம்பமாகி இரவு பகலாக தொடர்ச்சியாக எதிர்வரும் திங்கட்கிழமை  மாலை 4 மணி வரை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஒரு பொது அழைப்பாக கருதி அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறுபதாவது கூட்டத்தொடரில் 22 தொகுதி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் எமக்காக எமது உறவுகளுக்காக நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இதுவரை காலமும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

மனிதாபிமானத்தை பேணுகின்ற மனித உரிமை பேரவையிலே எமக்கான நீதியினை வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் புவியியல் அரசியலைத் தவிர்த்து முன்வர வேண்டும். ஏனைய நாடுகள் மற்றும் அனுசரணை வழங்கும் நாடுகளிடமும் நாம் கோரிக்கையை விடுக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை நாம் இங்கே ஈழத்தில் வாழும் தமிழர்களாக தெரிவித்து கொள்கிறோம். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் - என்றனர்.

No comments