இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் குவியம் ஊடகம் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குவியம் விருதுகள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரி பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இம்முறை ‘குவியம் விருதுகள் 2025‘ இல் காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத்திரைப்படங்கள் (Pilot films), திரைப்படங்கள் என 04 பிரிவுகளின் கீழ் மொத்தமாக 48 விருதுகளும் சிறப்பு விருதுகள் சிலவும் வழங்கப்படவுள்ளன. (இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் கோரப்பட்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது)
குவியம் விருதுகளில் ஆண்டு தோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரை பாராட்டி கௌரவித்து ‘வாழ்நாள் சாதனையாளர்‘ விருது வழங்கப்படுகின்றது. இந்த வருடம் மூத்த நடிகர் ராஜா கணேசன் அந்த கௌரவத்தைப் பெறுகின்றார்.
அது மட்டுமல்லாது எமது சினிமா துறையில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சிரேஸ்ட கலைஞர்கள் ஐவரை ஆண்டு தோறும் கௌரவிப்பதுண்டு. அந்த வகையில் இம்முறை நடிகை கமலாஸ்ரீ மோகன்குமார், இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இயக்குனர் கிங் ரட்ணம், நடிகர் இளங்கோ ஜி ஆகியோர் அந்த கௌரவத்தை பெறுகின்றனர்.
மிக முக்கியமாக எம் பெருமை, ‘பெருசு‘ [Remake of Tentigo (Sinhala Nelum Kuluna)] பட இயக்குனர் இளங்கோ ராம் மற்றும் ஸீ தமிழ் ‘மகா நடிகை‘ புகழ் நடிகை கவிப்பிரியா ஆகியோரும் சிறப்பு கௌரவங்களைப் பெறுகின்றனர்.
சம காலத்தில் இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு தமிழ் சினிமா விருது வழங்கும் விழா “குவியம் விருதுகள்” என்பதுடன், இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் சினிமா கலைஞர்கள். சினிமா விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்களுடன் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் நம் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்






No comments