சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாயய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது.
தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
No comments