தற்போதைய அரசாங்கம் உண்மையிலையே போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நினைத்தால் , மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றி இம்முறை அணைந்தது துயிலுமில்லங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச. ஜீவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை என பலரும் கண்டனம் தெரிவித்துள்னர்.
உன்மையில் அவர் மனதார அஞ்சலி செலுத்த தான் சென்றாரா ? கடந்த காலங்களில் அவர் அஞ்சலி செலுத்தினாரா? அல்லது ஐநா மனிதவுரிமை அமர்வுகள் நடைபெற்று வரும் வேளைகளில் தமிழ் மக்களும் நாங்களும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்களுக்காக போராடியவர்களை நினைவு கூற அனுமதித்துள்ளோம். எமது அமைச்சரும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என சர்வதேச சமூகத்திற்கு காட்டும் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு.
உண்மையிலையே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்குமாக இருந்தால் , மாவீரர் துயிலுமில்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் துயிலுமில்லங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்
விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 10 இராணுவத்தினரே உள்ளனர். அவர்கள் தமக்கு மேலிடம் சொன்னால் , அந்த முகாமில் இருந்து தாம் வெளியேறிவிடுவோம் என்கின்றனர். அந்த மேலிடதிற்கு ஜனாதிபதி உத்தரவிட முடியும்.
எனவே வடக்கு கிழக்கில் உள்ள துயிலுமில்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி , மாவீரர் நாளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றது என கூற முடியும்
அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகி ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் , வடக்கில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வடக்கில் தொடங்கப்பட்ட எந்த அபிவிருத்தி பணிகளும் , மேற்கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. கல்லு வைத்ததுடன் சரியாக உள்ளது.
கிளிநொச்சியில் வலைப்பாடு , கிராஞ்சி பகுதிகளுக்கு செல்லும் வீதி புனரமைக்கப்படவேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் டக்ளஸ் தேவானந்தா அடிக்கல் நாட்டி இருந்தார். ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் , சந்திரசேகரர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.
மழை காலம் ஆரம்பமாகவுள்ளதால் , மழை காலத்தில் அந்த பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கவுள்ளனர், எனவே அந்த வீதி அபிவிருத்தி பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று கிளிநொச்சியில் , சுண்டிக்குளம் வீடு , கல்மடு வீதி , முக்கொம்பன் வீதி என பல வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது. அவற்றை இந்த அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.
அத்துடன் சஜித் பிரேமதாசாவினால் வழங்கப்பட்ட வீட்டு திட்டங்கள் ,பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது வீட்டு திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் , பாதி நிதி கூட பயனாளிகளுக்கு கொடுக்கப்படாத நிலையில் , நிதி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு திட்டத்தில் வீட்டினை கட்டுவதற்காக தமக்கு கிடைத்த சிறு தொகை நிதியுடன் , தமது நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணத்தினை பெற்று வீடுகளை கட்டி அரைவாசியில் உள்ள நிலையில் அவர்களுக்கான வீட்ட திட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளமையால் , அவர்களுக்கு தற்போது ஒழுங்கான வீடும் இல்லை , அவர்களின் நகைகளையும் மீட்க முடியாது போய் நகைகளும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.
எனவே இந்த அரசாங்கம் வீட்டு திட்டத்திற்கான நிதியினை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
No comments