கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
தேசிய மட்டத்தில் சாதித்த வீரர்களை ஊக்குவிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் ஏனையோரையும் சாதிக்கத் தூண்ட முடியும். அதேபோல தேசிய மட்டத்தில் சாதிக்கும் மாணவர்களின் பாடசாலைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடான கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் என்பது பெருமளவில் இடம்பெறவில்லை. இந்த விடயத்தில் மாகாண விளையாட்டுத் திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தி, பிரதேச மட்ட கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தந்த மாவட்டச் செயலர்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.
விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டி மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப்போட்டி என்பனவற்றுடன் தமது பணி முடிந்ததாகக் கருதுகின்றனர்.
குறிப்பாக பிரதேச விளையாட்டுக் கழகங்களை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துக் கலந்துரையாடுவதுடன் விட்டுவிடுகின்றனர்.
அந்தக் கழகங்களை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் செயலாற்றுவதில்லை. விளையாட்டு உத்தியோகத்தர்கள் களத்தில் எப்படி பணியாற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதுடன் அவர்களின் வினைத்திறனின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.









No comments