கிளிநொச்சியில் பெண்ணொருவரின் சிறிய கடையை கும்பல் ஒன்று அடித்து உடைத்து சேதம் விளைவித்துள்ளது.
ஆனையிறவு தட்டுவான் கொட்டி சந்தி பகுதியில் பெண்ணொருவர் சிறிய கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். கடைக்கு முன்பாக சிலர் டிப்பர் வாகனங்களை நிறுத்துவதனால் , தனது கடை வீதியில் செல்வோருக்கு தெரியாமல் இருப்பதனால் , டிப்பர் வாகனங்களை அப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என கடை உரிமையாளரான பெண் கூறி வந்துள்ளார்.
அப்பெண் கூறியதை கேட்காது டிப்பர்களை அவ்விடத்தில் தொடர்ந்தும் நிறுத்தி வந்தமையால் , அப்பெண்ணுக்கு டிப்பர் சாரதிகளுக்கும் தொடர்ச்சியாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை டிப்பர் வாகனத்தை நிறுத்தியவர்களை அவ்விடத்தில் டிப்பரை நிறுத்த வேண்டாம் என பெண் கூறியதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து , டிப்பரில் வந்தவர்கள் பெண்ணின் கடையை அடித்து உடைத்து சேதமாக்கி பெண்ணையும் அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.









No comments