2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் "பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா" தங்கப் பதக்கத்தை, குறித்த பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான ஏ.எச். ஏ.டி. அபேசேகரவுக்கு வழங்குவதற்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த தீர்மானத்தை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியும், மொரட்டுவைப் பிரதேசத்தில் வசிப்பவருமான கல்பனா மானவடுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த பின்னர், சோபித ராஜகருண, மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தத் தங்கப் பதக்கத்தை வழங்குவதற்காக வெளிப்படைத்தன்மை கொண்ட, புள்ளிகளை வழங்கும் முறையான நடைமுறை ஒன்றை தயாரிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் குறித்த பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த தங்கப் பதக்கத்திற்காக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி தாம் விண்ணப்பம் சமர்ப்பித்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
பின்னர், புள்ளிகள் வழங்கும் முறை மாற்றப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்ததாகவும், அதனையடுத்து தாம் மீண்டும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த தங்கப் பதக்கத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான ஏ.எச். ஏ. டி. அபேசேகரவுக்கு வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், இந்தத் தங்கப் பதக்கத்தை வழங்கும் செயற்பாட்டில், முறையான வெளிப்படைத்தன்மை கொண்ட புள்ளிகள் வழங்கும் முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெரிவதாகக் குறிப்பிட்டது.
இந்தக் செயலின் மூலம், மனுதாரருக்கு சட்டத்தின் முன் சமமான கவனிப்பைப் பெறுவதற்கான அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டது.
அதன்படி, குறித்த தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழகத்தின் மின்சாரப் பிரிவின் ஆலோசகரான ஏ.எச். ஏ.டி. அபேசேகரவுக்கு வழங்குவதற்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த தீர்மானம் வலுவிழக்கச் செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உரிய கால அவகாசம் கடந்துவிட்டதால், இந்தத் தங்கப் பதக்கத்தை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது எனவும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



.jpeg)


No comments