உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
கோட்டையின் அபிவிருத்தியின் தேவைப்பாடு தொடர்பில் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்டமுன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.
திட்டத்தை தொடங்குவதற்கான தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன சமய கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலருடன் விரிவான கலந்துரையாடல் நடத்துவதற்கு இன்றைய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், உலக வங்கிக் குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைசார் சிரேஷ்ட விரிவுரையாளர் உள்ளிட்ட தொடர்புடைய பங்குதாரர்கள் பங்கேற்றிருந்தனர்.






No comments