தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சிலர் ஒப்பந்த வேலைகளை முன்னெடுப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலான இந்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளமைக்காக பொறியியலாளர்களுக்கு பாராட்டுகின்றேன்.
இதேபோன்று அடுத்த ஆண்டும் மக்கள் மேலதிகமாக பயிர்செய்கை செய்யக் கூடிய வகையில் குளங்களின் புனரமைப்புக்கள் அமையவேண்டும்.
மேலும், நீர்பாசனத்திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். அதனை நீர்பாசனத் திணைக்களம் புனரமைப்பதில் முரண்பாடுகள் காணப்படுமாயின் வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது உள்ளூராட்சி மன்றத்திடம் அவற்றைக் கையளிக்கலாம்.
இதேநேரம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சிலர் இன்னமும் ஒப்பந்த வேலைகளை முன்னெடுப்பதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது, என ஆளுநர் தெரிவித்தார்.
இதேநேரம், நீர்பாசனப் பொறியியலாளர்கள் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துக்கூறினர். இது தொடர்பில் விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.




.jpg)


No comments